Friday, February 17, 2012

நபிகள் நாயகத்தின் உருவ அமைப்பும், குணாதிசயங்களும் -1


ஓரிறையின் நற்பெயரால்....
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவ அமைப்பும், குணாதிசயங்களும் - 1

நபி (ஸல்) அவர்களின் அங்க அமைப்புகள்
அனஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இல்லாமல் நடுத்தர உயரமானவர்களாகவும் அழகிய உடலமைப்புடையவர்களாகவும் இருந்தனர். அவர்களின் முடி முற்றிலும் சுருண்டவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை. அவர்கள் கோதுமை நிறமுடையவர்களாக இருந்தனர். நடக்கும் போது (முன்புறம்) சாய்ந்து நடப்பார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி)

பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது : சிவப்புநிற ஆடையணிந்து, தோள் புஜத்தைத் தொடும் தலைமுடியுடன் அழகுற நபி (ஸல்) அவர்கள் விளங்கியது போல் வேறெவரையும் நான் கண்டதில்லை. அவர்களின் தலைமுடி தோள்புஜத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும். இரண்டு தோள் புஜங்களுக்கு இடைப்பட்ட தொலைவு அதிகமாக இருக்கும். (மார்பு அகன்றிருக்கும்). அவர்கள் குட்டையாகவோ நெட்டையாகவோ இருக்கவில்லை. (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம், நஸயீ, இப்னுமாஜா)

அலி (ரலி) அவர்கள் கூறியதாவது :  நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இருக்கவில்லை. இரு உள்ளங்கைகளும், இரு பாதங்களும் சதைபிடிப்புள்ளதாக (உறுதி வாய்ந்ததாக) இருக்கும். தலையும், மூட்டுகளும் பெரிதாக இருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை (கோடுகள்) போன்று முடிகளிலிருக்கும். மேடான இடத்திலிருந்து பள்ளமான இடத்திற்கு இறங்கும் போது அடிஎடுத்து வைப்பது போல் அடிஎடுத்து நடப்பார்கள் (கால்களை தேய்த்துக் கொண்டு நடக்க மாட்டார்கள்). இவர்களைப் போன்றவரை இதற்கு முன்பும் இதற்கு பின்பும் நான் கண்டதில்லை. (நூல் - ஸூனன் திர்மிதி)

ஹஸன் இப்னு அலி (ரலி) அவர்கள் கூறியதாவது :  நான் என் மாமா ஹின்த் இப்னு அபீஹாலா அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்களைப் பற்றி வினவினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். எனவே அவர்களைப் பற்றி (அறிந்து) மனனம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும், பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களின் முகம் பௌர்ணமி இரவின் சந்திரன் போல் பிரகாசிக்கும். நடுத்தரமான உயரமுடையவர்களை விட சற்று கூடுதலாகவும், நெட்டையான மனிதர்களை விட சற்று குறைவானவர்களாகவும் இருந்தனர்.

தலை நடுத்தரத்தை விட சற்று பெரிதாக இருந்தது. அவர்களின் முடி சுருண்டிருந்தது. தலையில் தற்செயலாக வகிடுபடிந்துவிடுமாயின் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். இல்லையெனில் (வகிடு எடுப்பதை) பிராதனப்படுத்துவதில்லை. முடியை வளரவிட்டுருந்தால் அது காதின் சோனையைத் தாண்டிவிடுவதும் உண்டு.

மேனி ஒளிவீசிக் கொண்டிருக்கும். படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களும் சேர்ந்திருக்காது. இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு நரம்பிருக்கும். கோபம் வரும் போது அது எழும்பிக் கொள்ளும். அவர்களை முதன்முதலில் காண்போர் மூக்கு நீண்டதாக காண்பர். ஆனால் கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும். தாடி அடர்ந்திருக்கும்.

கன்னங்கள் மிருதுவாயிருக்கும். வாய் அகன்றிருக்கும். பற்கள் இடைவெளிவிட்டவையாக இருக்கும். அவர்களின் கழுத்து வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப் போல அழகாயிருக்கும். அவர்களின் அவையங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதைப்பிடிப்புள்ளதாகவும் இருக்கும்.

வயிறும் நெஞ்சும் சமமானதாகவும் இருக்கும். நெஞ்சு விரிந்திருக்கும். இரண்டு தோள்புஜங்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாக இருக்கும். மூட்டுகள் உறுதிவாய்ந்தவையாக இருக்கும். ஆடைகளை அகற்றும் போது உடல் பிரகாசமாயிருக்கும். நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் மத்தியில் கோடுகள் போன்ற நீண்ட முடியிருக்கும். மார்பிலும், வயிற்றிலும் முடியிருக்காது.

முழங்கைகள், தோள்புஜங்கள், நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும். இரு உள்ளங்கைகளின் மூட்டுகள் நீளமானதாக இருக்கும். உள்ளங்கை விரிந்து இருக்கும். உள்ளங்கையும், பாதமும் சதைபிடிப்புடன் இருக்கும். கை, கால், விரல்கள் பொருத்தமான அளவிலிருக்கும்.

பாதங்கள் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். பாதங்கள் மிருதுவாயிருப்பதால் அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை. நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள். நடக்கும்போது மேடான இடத்தில் இருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் அவர்கள் நடையிருக்கும்.

யாராவது அழைத்தால் முகத்தை மட்டும் திருப்பாமல் முழுமையாக திரும்புவார்கள். அவர்கள் பார்வை பூமியை பார்த்தே இருக்கும். ஒரு சாதாரணப் பொருளைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு அவர்கள் பின்னால் வருவார்கள். தன்னைச் சந்திப்பவர்களுக்கு அவர்களே ஸலாம் கூறி ஆரம்பிப்பார்கள்.

ஜாபிர் இப்னு சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் வாய் அகன்றதாக இருக்கும். கண்களின் வெண்மையில் செவ்வரி படர்ந்திருக்கும். குதிங்கால் சதைப் பிடிப்பில்லாததாக இருக்கும். (நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத், முஸ்லீம்)

ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது :  நிலா ஒளிவீசிக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கக் கண்டேன். நபியவர்கள் சந்திரனை விட அழகானவர்களாக எனக்குத் தோன்றினார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, தாரமீ)

அபுஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வெள்ளியால் உருவாக்கப்பட்டவர்களைப் போல் வெண்மையாக இருப்பார்கள். அவர்களின் முடி முற்றிலும் சுருண்டைவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்.


0 comments: